அதிமுக-வினர் ஒட்டுக் கேட்டு வர வேண்டாம் -போஸ்டர் வெளியிட்டு அதிர வைத்த விஜய் ரசிகை
விஜய் ரசிகை ஒருவர் வெளியிட்ட போஸ்டர் ஒன்று அதிமுக-வினரை கலங்கடித்து விட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் தலைவர்கள். இதனால், தமிழக தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் ரசிகை வெளியிட்ட ஒரு போஸ்டர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவியான ஜெகதீஸ்வரி வெளியிட்ட அந்த போஸ்டரால் அதிமுகவினர் சற்று அதிர்ந்து போயிருப்பார்கள். ‘இது தளபதி ரசிகை இல்லம்....அதிமுக-வினர் ஒட்டுக் கேட்டு வர வேண்டாம்’ என்ற போஸ்டர்தான். அதிமுக-வின் மேல் அப்படி என்ன கோபம் என அவரிடம் கேட்டோம், ‘ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘சர்கார்’. விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்துக்கு இருந்தது. இதைக் கொண்டாடும் வகையில் பல ஆயிரங்கள் செலவழித்து ஃப்ளெக்ஸ், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், சர்கார் படத்துக்கு எதிராக அதிமுக-வினர் போர்க் கொடி ஏந்தினர். அதோடு, ஃப்ளெக்ஸ், பேனர்களையும் கிழித்து எறிந்தனர். படத்திற்கான எதிர்ப்பு இந்த அளவில் எந்த நடிகருக்கும் ஏற்பட்டதில்லை. சொந்த செலவில் வைத்திருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தனர். இந்த சம்பவம் என மனத்தில் மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் அனைவரது மனதிலும் வடுவாகப் பதிந்து விட்டது. அதனால், நடைபெறும் தேர்தலில் அதிமுகவினர் ஒட்டுக் கேட்டு வந்தால், அவர்களை நிராகரிக்க வேண்டும் என்ற கோக்கில் ‘இது தளபதி ரசிகை இல்லம்....அதிமுக-வினர் ஒட்டுக் கேட்டு வர வேண்டாம்’ எனக் குறிப்பிட்டு போஸ்டர் அடித்தேன். இணையதளங்களில் பதிவேற்றம் செய்தேன்’ என்றார்.