`பிரியாணி மட்டும் சாப்பிட்டு இருந்தா நடக்காது தம்பி - பாக்., கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுத்த வாசிம் அக்ரம்
பிரியாணி மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என பாகிஸ்தான் வீரர்களை முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகக்கோப்பைப் போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாத வகையில் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மற்ற அணி வீரர்களை விட அதிக அளவு உடல்தகுதி பிரச்னை ஏற்படுவது பாகிஸ்தானுக்கு தான். அதனால் இந்த முறை வீரர்கள் உடல்தகுதி விவகாரத்தில் அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமும் இதே கருத்தை தற்போது வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ``பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இன்றுவரை பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. பிரியாணியை வழங்கி வந்தால், சாம்பியன்ஸுக்கு எதிராக போட்டியிட முடியாது'' என விமர்சித்ததாக பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக் குழுவினர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறும் 23 பேர் கொண்ட உத்தேசப் பட்டியை ஏற்கெனவே வெளியிட்டுள்ளனர்.