`காயம்பட்டுருச்சு காசு கொடுங்க - இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய ஸ்டார்க்

இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்சேல் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். பல்வேறு எதிரணி பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் சாய்த்துள்ளார். ஐபிஎல்லிலும் விளையாடி வருகிறார். சில சீசன்களாக பெங்களூரு அணியில் இருந்த இவரை கடந்த 2018 ஐ.பி.எல் சீசனில் ஷாரூக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்பே தென் ஆப்ரிக்கா தொடரின்போது ஸ்டார்க்-க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது மட்டும் இல்லாமல் ஐ.பி.எல் தொடரில் இருந்தும் விலகினார். அதற்காக சிகிச்சை எடுத்தும் வந்தார்.

இதற்கிடையே ஐ.பி.எல் தொடரில் விளையாடும்போது ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் ஸ்டார்க் காப்பீடு செய்திருந்தார். இதற்காக குறிப்பிட்ட அளவிலான தொகையை பிரிமீயமாக செலுத்தியுள்ளார். அவருடைய இன்சூரன்ஸ் மதிப்பு சுமார் 10 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும். இதனை பெறுவதற்காக அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் மறுக்கவே தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனக்கான இன்சூரன்ஸ் தொகையை பெற்று தருமாறு ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் கவுண்டி நீதிமன்றத்தில் ஸ்டார்க் வழக்கு தொடர்ந்துள்ளார். விரைவில் இதற்கான விசாரணை நடைபெற உள்ளது.

More News >>