சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாஜக எம்எல்ஏ உட்பட 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏவும், சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த பின் முதன்முதலாக மிகப் பெரும் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர். மாவோயிஸ்டுக்கள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மலைப்பகுதியில் இன்று மாலை இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஸ்தார் மக்களவைத் தொகுதியில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், பாஜக எம்எல்ஏ பீமா மந்தவி என்பவர் ஆதரவாளர்களுடன் தண்டேவாடா பகுதியில் பிரச்சாரம் முடிந்து வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, மாவோயிஸ்டுகள் கண்ணி வெடித் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்எல்ஏ சென்ற கார் வெடித்து சின்னாபின்னமானது.

இதில் எம்எல்ஏவும், பாதுகாப்புக்குச் சென்ற சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். மாவோயிஸ்டுகள் நடத்திய இந்த கொடூர தாக்குதல் சத்தீஸ்கரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மாநில முதல்வர் பூ பேஸ் பாகல் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

More News >>