`நாங்கள் செய்யாத தவறுக்காக பிரச்சனைகளை சந்திக்கிறோம் - வீடியோ வெளியிட்டு குமுறிய வெங்கட் பிரபு
நாங்கள் செய்யாத தவறுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் களத்தை மையமாக வைத்து காமெடி பாணியில் படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த காட்சிகள் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. இதற்கிடையே படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸில் பிரச்னை உள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ``நாங்கள் செய்யாத தவறுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். தேர்தல் முடிந்த பிறகு தான் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஒன்றை மட்டும் தெரிவித்து கொள்கிறேன் சினிமா ரசிகர்களும், ஊடங்களும் படம் ரிலீஸ்க்கு பிறகும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது அரசியல் படம் அல்ல யாரையும் குறிப்பிட்டு இந்த படம் எடுக்கவில்லை இது ஒரு ஜனரஞ்சகமான படம் யாரும் இந்த படத்தை பார்த்து குழம்ப வேண்டாம் என்றும் தல பாணியில் சொல்ல வேண்டுமென்றால் வாழு வாழ விடு" எனக் கூறியுள்ளார். இது திரையுலகில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் தரப்பில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்ச வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை- ராமதாஸ்