`இந்த வீட்டையும், உங்க சாப்பாட்டையும் மறக்கமாட்டேன் - கேரள தம்பதியினரை நெகிழவைத்த சுரேஷ்கோபி

பிரச்சாரத்தின் போது சாப்பிட சோறு கிடைக்குமா எனக் கேட்டு வாக்காளர் ஒருவர் வீட்டில் உணவருந்தியுள்ளார் கேரள நடிகர் சுரேஷ் கோபி.

பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி. ஏரளமான திரைப்படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்தே மக்களை கவர்ந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன் தீவிர நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் கால்பதித்தார். இந்து பக்தர் என்பதால் அதற்கு ஏற்றவாறு பாஜகவில் ஐக்கியமானார். கட்சியில் சில மாதங்களிலேயே டெல்லி மேல்சபை எம்பியாகவும் ஆனார். இதற்கிடையே தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்து கட்சியான பாஜகவில் இருந்து கொண்டு தொகுதியில் அதிகம் உள்ள முஸ்லீம், கிறிஸ்துவ மக்களை கவரும் விதத்தில் பேசி வாக்கு சேகரித்து வருகிறார். அதேநேரம் சபரிமலை கோவில் விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். ஆனால் இந்த விவகாரத்தை நான் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்த விரும்பவில்லை என சர்ச்சையாக பேசி இந்துக்கள் ஓட்டையும் கவர்ந்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுத்துள்ளது. திருச்சூர் தொகுதிக்குட்பட்ட பீடிகப்பறம்பு அய்யப்பன் காவு பகுதியில் சுரேஷ்கோபி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மதிய நேரம் ஆகிவிட்டதால் பிரசார வாகனத்தை நிறுத்திய சுரேஷ்கோபி அங்கு உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றார். வீட்டில் இருந்தவர்கள் இவர் வாக்கு கேட்க வந்திருக்கிறார் என எண்ணி பேச முயன்றனர். ஆனால் சுரேஷ் கோபியோ அங்கிருந்த சுனில், செளமியா தம்பதியினரிடம் `சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா' எனக் கேட்டு அவர்களை ஆச்சர்யப்படுத்தினார். கேரள சூப்பர் ஸ்டார் தங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கிறதா எனக் கேட்டதும் ஆச்சர்யப்பட்ட அவர்கள், தொட்டுக்க பொரியல் சரியாக இல்லையே என கூறி தங்கள் நிலைமையை எடுத்துரைத்துள்ளனர்.

photo courtesy: mathrubhumi

ஆனால், அவரோ இருப்பதை கொடுங்கள் போதும் எனக் கை கழுவிவிட்டு அமர்ந்தார். உடனே அவரை அமர வைத்த சுனில் வீட்டினர், சோறும், சாம்பார், தீயல், ஊறுகாய் ஆகியவற்றை பரிமாறி அசத்தினர். சாப்பிடும் போதே தீயலின் சுவை நாவைவிட்டு போகவில்லை எனக் கூறி வீட்டினரை குளிரவைத்தார் சுரேஷ்கோபி. இதற்கு பதிலடியாக ``முன்பே சொல்லியிருந்தால் நாங்களும் தடபுடலாகச் சமைத்திருப்போம்" என சுனில் வீட்டினர் கூறினர். பின்னர் சாப்பிட்டு முடிந்த பிறகு வீட்டில் இருந்த அனைவருடனும் செல்ஃபி எடுத்த சுரேஷ்கோபி புறப்படும்போது, ``இந்த வீட்டையும், இன்றைய உணவையும் மறக்கமாட்டேன். எனக்கு ஓட்டுபோடுவீர்கள்தானே" எனக் கூறிவிட்டு சிரித்தபடி சென்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

More News >>