`100 கோடி ரூபாய் அபராதம் ரத்து - தமிழக அரசை ரிலாக்ஸ் செய்ய வைத்த ஐகோர்ட்

சென்னையின் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை தடை செய்துள்ளது சென்னை ஐகோர்ட்.

சென்னையின் நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயைப் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2013-ம் ஆண்டிலிருந்து நடந்துவந்த இந்த வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 13-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அதில், ``கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட பொதுப்பணித்துறை காரணமாகிவிட்டது. இதனால் 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும்.

அதேநேரம், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்தது. மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

 

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட உயர் கல்வித்துறை செயலர் - கைது வாரண்ட் ரத்து!

More News >>