தளபதி 63-ல் ஷாருக்கான் கன்ஃபார்ம்.. சிஎஸ்கே போட்டியில் சிக்னல் கொடுத்த அட்லி!
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி.
சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணியை தலை தூக்க விடாமல் தல தோனியின் படை துவம்சம் செய்தது. அண்ட்ரே ரஸல் ஒரு பக்கம் அடித்துக் கொண்டிருந்தாலும், அவரை குறிவைப்பதற்கு பதிலாக, மற்ற வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓனர் ஷாருக்கான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சிறிது நேரத்துக்கெல்லாம் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா வந்து அமர்ந்து கொண்டு இறுதி வரை போட்டியை கண்டு களித்தனர்.
முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் குருகிராம் என்ற கிராமம் உருவாக்கப்பட்டு பிரம்மாண்ட போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்ட செய்திகள் வெளியாகின.
அந்த செட்டில் போலீஸ் அதிகாரியாக சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் பரவின. இந்நிலையில், நேற்றைய போட்டியில், ஷாருக்கான் அருகில் உட்கார்ந்து வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்த அட்லி, தளபதி ரசிகர்களுக்கு மறைமுகமாக அந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார் என்றே ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.
மேலும், நேற்றைய போட்டியில் தனுஷும் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார்.