3 வருஷத்துல 4 தேர்தல்...! குன்றத்து வாக்காளர்கள் குஷியோ குஷி

அடுத்தடுத்து 3 வருஷத்தில் 4 தேர்தலால் திருப்பரங்குன்றம் வாக்காளர்கள் பண மழை கொட்டப் போகிறது என படு குஷியில் உள்ளனர்.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் எஸ்.எம்.சீனிவேல் வெற்றிச் செய்தி வந்த போது கோமாவில் இருந்தவர், எம்எல்ஏவாக பதவியேற்கும் முன்பே மரணமடைந்து விட்டார். அதன் பின் அதே ஆண்டு அக்டோபரில் இடைத்தேர்தல் வர, ஆளும் அதிமுக தரப்பு ஒட்டுக்கு 2000 ரூபாய் தர, எதிர்த்து நின்ற திமுகவோ 1000 ரூபாய் தர, திருப்பரங்குன்றம் மக்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள்.

அந்த இடைத் தேர்தலில் வென்ற அதிமுகவின் ஏ.கே.போசும் அல்ப ஆயுசில் போய்ச் சேர மீண்டும் தொகுதி காலியாகி விட்டது. ஆகா மீண்டும் இடைத் தேர்தல் என்று குன்றத்து வாசிகள் எதிர்பார்க்க, 2 முறை தள்ளிப் போய், தற்போது மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஒரு மாதம் கழித்து இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களவைத் தேர்தலுக்காக நல்ல கவனிப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள திருப்பரங்குன்றம் வாக்காளர்கள், அடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஒரு மாத காலத்துக்கும் நல்ல கவனிப்பு கிடைக்கப் போகிறது என்று ஏக குஷியோ குஷியில் உள்ளனர்.

More News >>