ஓரங்கட்டிட்டாரு டிடிவி...! கோள் மூட்டிய சொந்தங்கள்...!! வாய்ப்பூட்டு போட்ட சசிகலா
அமமுக கட்சியில் ரத்த சொந்தங்களை சுத்தமாக வேண்டாம் என்று டிடிவி தினகரன் ஓரங்கட்டி விட்டார் என்று சசிகலாவை சிறையில் சந்தித்த சொந்தங்கள் ஏகத்துக்கும் புகார் கூறி புலம்பியுள்ளனர். இதற்கு சசிகலாவோ, தான் வெளியில் வரும் வரை எந்தக் குட்டிக் கலாட்டாவும் செய்யாமல் அமைதி காக்க வேண்டும் என்று சொந்தங்களுக்கு வாய்ப்பூட்டு போட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அமமுக கட்சியைத் தொடங்கிய தினகரன், இந்தத் தேர்தலில் தனியொருவனாக தமிழகம் முழுவதும் கெத்து காட்டி வருகிறார். ஜெயலலிதா காலம் போல் தேர்தல் பணிகளை ஆளுக்கொரு மண்டலமாக பிரித்துக் கொடுப்பார் என்று சசிகலாவின் ரத்த உறவுகள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு முன் தேர்தலுக்கு தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, பணப்பட்டு வாடா போன்ற விஷயங்களை சசிகலா கணவர் எம்.என் எனப்படும் எம்.நடராஜன், அவருடைய தம்பி எம்.ஆர் எனப்படும் எம்.ராமச்சந்திரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ்,கோவை ராவணன் போன்றவர்கள் திரை மறைவில் ஏகப்பட்ட வேலைகளை செய்து பழக்கப்பட்டவர்கள்.
ஆனால் தற்போது அம முகவில் ரத்த உறவுகள் ஒருவரைக் கூட அண்டவிடாமல் தனிக் காட்டு ராஜாவாக தினகரன் வலம் வருவது ஏக வருத்தத்தைக் கொடுத்துள்ளதாம். இதையெல்லாம் சமீபத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த உறவினர்கள் சிலர் அழாத குறையாக சொல்லி புலம்பியுள்ளனர்.
ஆனால் சசிகலாவின் ரியாக்சனோ, நேர் எதிராக வேறு மாதிரி இருந்ததாம். அம முகவை ஆரம்பித்தது முதல் இன்று வரை கட்சியை உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு காரணமே தினகரன் தான். அவர் போக்கிலேயே கட்சியை நடத்தட்டும். நான் வெளியில் வந்த பிறகு மற்றதை பார்க்கலாம்.அதுவரைக்கும் யாரும் தினகரனை சீண்டிப் பார்ப்பதோ, தொந்தரவு செய்வதோ கூடவே கூடாது என்று கண்டிப்பு காட்டி வாய்ப்பூட்டு போட்டு விட்டாராம் சசிகலா .
இது தான் தற்போதைய தேர்தலில் திவாகரன், அவருடைய மகன் ஜெய் ஆனந்த், பாஸ்கரன், எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ரத்த உறவுகள் கப்சிப் என அடங்கிப்போய் மவுனம் சாதிப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் தினகரன் சாதித்துக் காட்டுவாரா? மாட்டாரா? என பார்ப்போம். அதன் பின் கச்சேரியை வைத்துக் கொள்வோம் என்று மனப் புழுங்கலுடன் சசிகலா உறவுகள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர்.