ஸ்டெர்லைட் போராட்டம்: இரங்கல் கூட தெரிவிக்காத மோடி -மு.க.ஸ்டாலின் விளாசல்

தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க ஆக்கப் பார்க்கிறது பாஜக என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தலில், போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அதன் வகையில், நாகர்கோவில், நெல்லை, சங்கரன் கோவிலில் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது, பேசிய ஸ்டாலின், ‘பா.ஜ.க. செல்வாக்கு மிக்க மாநிலங்களில்தான் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ளன. தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க ஆக்கப் பார்க்கிறது பஜாக. ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாகப் பிரதமர் மோடி இதுவரை இரங்கல் தெரிவிக்காதது ஏன்? தமிழகத்தில் நடந்த இந்த கொடூரம் தொடர்பாக இந்நாள்வரை வாய் திறக்காத மோடியை பாசிஸ்ட் என கூறுவதில் என்ன தவறு? எனப் பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதோடு, ‘தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாமா? கவிஞர், சமூக போராளி உள்பட பல்வேறு முகங்களைக் கொண்ட ‘பார்லிமெண்ட் டைகர்’ கனிமொழி’ எனக் கனிமொழிக்கு புகழாரம் சூட்டினார் ஸ்டாலின். 

More News >>