இரண்டு பாகங்களாக உருவாகும் சசி லலிதா.. இயக்குநர் ஷேரிங்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
2016 டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். சினிமாவில் தொடங்கி தமிழக அரசியலில் வரை தவிர்க்கமுடியாத இரும்புப் பெண்ணாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை பயோபிக் படமாக எடுக்க பல இயக்குநர்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ல் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தலைவி என்கிற பெயரில் ஜெ.வின் பயோபிக்கை எடுக்கவிருப்பதாக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். தவிர, இயக்குநர் பிரியதர்ஷனி ‘தி அயர்ன் லேடி’ என்கிற பெயரில் ஜெ.வின் பயோபிக்கை எடுக்கவிருக்கிறார். அதில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கவிருக்கிறார். இதுமட்டுமில்லாம, இயக்குநர் பாரதிராஜாவும் ஜெ.வாழ்க்கையை படமாக்க இருக்கிறார்.
இந்நிலையில் புதிதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவரான ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜெயம் மூவீஸ் தயாரிப்பில் ‘சசி லலிதா’என்கிற பெயரில் படம் உருவாக இருக்கிறதாம். அதற்கான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெகதீஸ்வர ரெட்டியிடம் பேசினோம் “ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அத்தனையும் இந்தப் படத்தில் இருக்கும். சிறுவயதில் ஜெயலலிதா எப்படி இருந்தார், அம்முவாக இருந்த ஜெயலலிதா எப்படி நடிகையானார், அரசியல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது, ஜெவுக்கும், சசிகலாவுக்கும் இடையில் இருந்த நட்பு, ஜெ எப்படி தமிழக தலைவராக மாறினார் என்று பல விஷயங்களை உண்மையாக இந்தப் படத்தில் எடுத்துச் சொல்லவிருக்கிறோம்.இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது. ’’ என்று கூறினார்.