அதிமுக கூட்டணியை காரித் துப்புறாங்க... பாமக துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகிய மணிகண்டன் விளாசல்
பாமகவில் இருந்து மற்றொரு விக்கெட்டாக மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு மக்கள் காரித்துப்புவதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையைத் தொடங்கி கொங்கு மண்டலத்தில் பிரபலமானவர் பொங்கலூர் மணிகண்டன். சில வருடங்களுக்கு முன் பாமகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பாக பேட்டியும் கொடுத்து அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்
திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும் தொடர்ந்து கூறி வந்தனர். அதிமுகவினரை ஊழல் பேர்வழிகள், டயர் நக்கிகள் என்று கடுமையாக விமர்சித்து விட்டு, இப்போது அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சையை அளிக்கிறது. இதன் பின்னணியில் பெரும் பேரம் தான் நடந்துள்ளது.அதிமுக பாமக கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை.
தேர்தல் களத்தில் மக்கள் இந்தக் கூட்டணியை கேவலமாக பேசுகிறார்கள். பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டுச் சென்றால், மக்கள் அசிங்கமாகப் பேசி காரித் துப்புகிறார்கள். இதனால் பாமகவில் நீடிக்க விரும்பவில்லை என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த காரணத்துக்காகவே, மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேஸ்வரி பிரபா , மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் ரஞ்சித் ஆகியோர் விலகிய நிலையில் இன்று மற்றொரு துணைத் தலைவரான மணிகண்டன் விலகியிருப்பதும், அதற்கு அவர் கூறிய காரணமும் பாமகவை மட்டுமின்றி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.