அமமுக வேட்பாளர் மீது பெண் பாலியல் புகார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிளறப்படுவது தேர்தலுக்காகவா?
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு மீது கடந்த திங்களன்று பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி வேட்பாளர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கதிர்காமு மீது 36வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த திங்களன்று பாலியல் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு தேனி அல்லிநகரத்தில் கதிர்காமு நடத்தி வந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி மயக்கிய கதிர்காமு, பலாத்காரம் செய்ததாகவும் இதுகுறித்து அப்போதே, அந்த பெண் தேனி அல்லிநகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ததாகவும்,
பின்னர், 2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கதிர்காமு எம்.எல்.ஏ., ஆனதால், அந்த வழக்கை கிடப்பில் போட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அணிக்குத் தாவிய கதிர்காமு சபாநாயகரால் நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் இடைத்தேர்தலில் பெரியகுளத்தில் அமமுக சார்பில் கதிர்காமு போட்டியிட உள்ள நிலையில், தற்போது இந்த புகாரை மீண்டும் ஏன் பதிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தின் தாக்கமாக, உயிர் பாதுகாப்பு வேண்டி இந்த புகாரை பதிவு செய்வதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்துள்ள கதிர்காமு, துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகம் என்றும், இதற்கு சிறிதும் தான் பயப்பட போவதில்லை என்றும் சட்டரீதியாக இந்த பிரச்னையை சந்திக்க தான் தயாராக உள்ளதாக கதிர்காமு கூறினார்.
மேலும், இந்த வழக்கில் டிடிவி தினகரனின் வலது கரமாக செயல்படும் தங்கத் தமிழ்ச்செல்வனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.