முதன்முறையாக 100 நாள் கூட ஆகாமல் டிவிக்கு வரும் ரஜினி படம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட.
விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. ரஜினி ரசிகர்களுக்காக, ஒரு ரஜினி ரசிகன் எடுத்த படமாக வெளியாகி கொண்டாடப்பட்டது. தவிர, படத்துக்கு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் உரிமையை கொண்டிருக்கும் சன் நிறுவனம், படத்தை தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறது. அதாவது படம் வெளியாகி சரியாக 95வது நாளில் தொலைக்காட்சிக்கு வருகிறது பேட்ட. சின்ன பட்ஜெட் படங்கள் அடுத்த வாரமே டிவிக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒரு பெரிய ஹீரோ படம், உடனே திரைக்கு வருவதால் எல்லோரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
சன் பிக்சர்ஸின் திரைப்படம் என்பதால் தான் விரைவில் தொலைக்காட்சிக்கு வந்துவிட்டது என்றாலும், இனி வரும் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகி ஒரே மாதத்தில் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம். வளர்ந்துவரும் நவீன தொழில் நுடபமும் கால மாற்றத்தின் விளைவும் அதை சாத்தியப்படுத்தும் என்கின்றனர் திரைத்துறையினர்.