வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன்
எதிர்வரும் மக்களை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவரும், கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி வகித்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன். அவர் பணியில் இருந்த போதே பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியவர். கர்ணன் நீதிபதியாக இருந்த காலம் முழுவதும் அவரை சுற்றி ஏதாவது பரப்பரப்பான செய்தி வந்து கொண்டேதான் இருந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை வாசத்தை அனுபவித்தவர் கர்ணன். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு ஊழல் எதிரான கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் உள்ள முறைகேடுகளை வெளிப்படுத்துவதே தனது நோக்கம் என கூறினார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் மத்திய சென்னையில் வேட்பாளராக கர்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கர்ணன் களம் இறங்குகிறார். தற்போது இந்த தொகுதியிலும் கர்ணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.