ஏமாற்றம் அளிக்கும் மத்திய அரசின் பட்ஜெட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசின் 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எவ்வித பயனும் அளிக்காத பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்காத பட்ஜெட்டாக இது உள்ளது.
பிஜேபி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து வரி விலக்கு என்ற அறிவிப்பு இந்த ஆண்டும் அறிவிக்கப்படவில்லை என்பது பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மாறாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது அரசின் கார்ப்பரேட் சார்பு தன்மையை தெளிவாக புலப்படுத்துவதாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வரும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க உருப்படியான திட்டங்கள் எதுவும் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர போவதாக அறிவித்த பிஜேபி இந்த பட்ஜெட்டிலும் இளைஞர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. மத்திய அரசு நிறுவனங்களில் மட்டும் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை பூர்த்தி செய்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க எவ்வித நடவடிக்கைகளும் இல்லை.
ரயில்வேயில் பல அறிவிப்புகள் வெளியிட்டுள்ள போதிலும், பயண கட்டணங்களை அதிகரிக்கவும், ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது கவலை தரும் உண்மையாகும்.
நிதிப்பற்றாக்குறை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தம்பட்டம் அடித்துள்ள போதிலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை மூலமாகவே இவை நிறைவேற்றப்பட உள்ளது என்பது பாராட்டத்தக்க அம்சம் அல்ல.
சிறு வியாபாரிகள் பெரிதும் எதிர்பார்த்து வந்த சலுகைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
1 கோடி புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிக்கப்பட்டாலும, அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் நலன்களை மேம்படுத்த பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும உண்மையில அவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.
பல அறிவிப்புகள் ஐந்தாண்டு திட்டம் போல மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இந்த ஆண்டில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெளிவாக குறிப்படவில்லை.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாதாரண, ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பற்றி கவலைகொள்ளாத பட்ஜெட்டாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.