நம்பும்படியாக இல்லை பாஜக தேர்தல் அறிக்கையில் திருத்தம் வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி தடாலடி
பாஜக தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரியுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை தொடங்குகிறது. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது நேற்று முன்தினம் 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 12 பேர் கொண்ட குழு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அதில், ‘விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்ட் வழங்கப்படும். 60 வயதிற்கு மேலான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் வரை வட்டியில்லாத கடன் வழங்கப்படும். நதிகளை இணைக்கும் திட்டம், கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் பதிவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுப்ரமணியன் சுவாமி. அந்த பதிவில்,’பாஜக தேர்தல் அறிக்கையில் 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயத்துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 24 சதவீதமாக உயரும். இது நம்ப முடியாத உலக சாதனையாக இருக்கும். அதனால், ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சி திட்டத்தை அறிவியுங்கள். உலகளவில் இந்தியாவின் ஜிடிபி 3-வது இடத்தில் உள்ளது ஆனால், 6-வது இடத்தில் இந்தியா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திருத்தங்களை பாஜக மேற்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரியுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாகவும் ஆனால் மோடியும் ஜெட்லியும் 5-வது இடத்தில் உள்ளதாகக் கூறி வருகின்றனர், மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என சுப்ரமணியன் சுவாமி விமர்சித்திருந்தார்.
`இந்த வீட்டையும், உங்க சாப்பாட்டையும் மறக்கமாட்டேன்' - கேரள தம்பதியினரை நெகிழவைத்த சுரேஷ்கோபி