நியாயஸ்தராக மாறிய தேர்தல் கமிஷன் !! பின்னணி தெரியுமா?

தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு வழக்கமாக தேர்தல் கமிஷன் பல கட்டுப்பாடுகளை விதிக்கும். ஆளும்கட்சிகளும் அதற்கு கட்டுப்பட்டு நடப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டு காபந்து அரசாக மாறிய பிறகும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. விண்ணில் செயற்கைக்கோளை வீழ்த்தும் ஏ சாட் ஏவுகணை சோதனையை நடத்தி அதை பிரதமரே நேரடியாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவி்த்தார். ராணுவத்தைப் பற்றி பேசி பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்தும், அதை மீறி தனது பிரச்சாரத்தில் பாலக்கோட் தீவிரவாதிகள் முகாமை தாக்கிய ராணுவப் பணியை தனக்கு சாதகமாக்கி பேசினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், ‘‘மோடியின் சேனா’’ என்று ராணுவத்தை குறிப்பிட்டு பிரசாரம் செய்தார்.

அதே போல், முந்தைய காங்கிரஸ் அரசின் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை பா.ஜ.க. கட்சியினர் தயாரித்து வெளியிட்டனர். சிறந்த பொருளாதார நிபுணரான மன்மோகனை சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டார் என்று கேவலமாக அந்தப் படத்தில் சித்தரித்திருந்தனர். இத்தனைக்கும் மன்மோகன் பிரதமராக இருந்த போது பத்திரிகையாளர்களை சந்திக்க தயங்கியதே இல்லை. ‘‘உறுதியான முடிவுகள் எடுக்க முடியாததற்கு கூட்டணி நிர்ப்பந்தம் காரணம்’’ என்று வெளிப்படையாக பேசியவர்.

அவரை மட்டம் தட்டி படத்தை வெளியிட்ட பின்பு, ‘‘பி.எம்.நரேந்திர மோடி’’ என்ற பெயரில் பிரதமர் மோடியை புகழ்ந்து மோடியின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தையும் பா.ஜ.க. எடுத்தது. இந்த படம் ஏப்ரல் 11ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், தேர்தல் கமிஷன் தற்போது படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது. அது மட்டுமல்ல. மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேசும் போது, ‘‘முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் தங்கள் வாக்குகளை ராணுவத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்’’ என்று கூறி பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்டதையும் தேர்தல் கமிஷன் சீரியசாக எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இது குறித்து அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறது.

இதே போல், தமிழகத்தில் டி.ஜி.பி. ராஜேந்திரன் தனக்கு பதவி நீட்டிப்பு அளித்த ஆளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக நடக்கிறார் என்றும், அவரை கடந்த தேர்தலின் போது எப்படி தேர்தல் பணியில் ஈடுபட விடாமல் ஒதுக்கி வைத்தார்களோ, அதே போல் இப்போதும் செய்ய வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெகு நாட்களுக்கு முன்பே கோரிக்கை விடுத்தும் அதை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், ஏப்ரல் 10ம் தேதியன்று, தேர்தல் பணிக்கென புதிய டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறது தேர்தல் கமிஷன்.

இப்படி ஏப்ரல் 10ம் தேதி ஒரே நாளில் தேர்தல் கமிஷன் திடீர் நியாயவானாக மாறியதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் காரணம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சலாஹுன் அகமது, மத்திய அரசின் முன்னாள் செயலாளர் எஸ்.பி.அம்ப்ரோஸ், என்.பாலபாஸ்கர், பாலச்சந்திரன், கோபாலன் பாலகோபால் என்று 47 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டாக கையெழுத்திட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

அவர்கள் ஏற்கனவே ஆளும்கட்சியினரின் விதிமீறல்கள் குறித்து தேர்தல் கமிஷனுக்கு சில கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது, ஏ சாட் ஏவுகணை சோதனையை தேர்தல் அறிவித்த பின்பு நடத்தியது தவறு, அப்படியே நடத்த வேண்டிய அவசரம் இருந்தாலும் அதை நடத்திய பின்பு டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளே அறிவித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிடக் கூடாது, குட்கா புகாரில் சிக்கியும் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள தமிழக டிஜிபி ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று அந்த கடிதங்களில் கூறியிருந்தனர்.

தேர்தல் கமிஷனிடம் இருந்து அவர்களுக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில்தான், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர். அதிலும் விதிமீறல்களை பட்டியலிட்டு, தேர்தல் கமிஷனுக்கு இத்தனை விதிமீறல்களை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், ‘‘எங்களில் பெரும்பாலான அதிகாரிகள் தேர்தல் பணியாற்றியிருக்கிறோம். இந்த அளவுக்கு விதிமீறல்கள் நடந்ததில்லை. தேர்தல் முறையாக நடைபெறாவிட்டால் அது நமது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்து விடும். எனவே, அரசியல் சட்டப்பிரிவு 324ல் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தலை முறையாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்’’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார்.

இந்த பின்னணியில்தான தேர்தல் கமிஷன் அதிரடியாக செயல்படத் துவங்கியுள்ளது என்று டெல்லியில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் டிஜிபியை மாற்றியது போல் தொடர்ந்து அதிரடியாக தேர்தல் கமிஷன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

 

வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன்
More News >>