கூகுள் பே நடத்த லைசென்ஸ் தேவையே இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம்!
கூகுள் பே செயலிக்கு தனியாக லைசென்ஸ் வாங்க தேவையே இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி லைசென்ஸ் இல்லாமல் செயல்படுவதாக டெல்லியைச் சேர்ந்த அபிஜித் மிஸ்ரா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கூகுள் பே லைசென்ஸ் பெற்று செயல்படுகிறதா? இல்லையா? என்பது குறித்து கூகுள் இந்திய நிறுவனம் மற்றும் ரிசர்வ் வங்கி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், உடனடியாக இதற்கு விளக்கமளித்துள்ள கூகுள் இந்திய நிறுவனம், கூகுள் பே நடத்த தனியாக லைசென்ஸ் ஏதும் பெறத் தேவையில்லை என்றும், இது NPCI எனப்படும் தேசிய கொடுப்பனவு கழகத்தின் உரிமைப் பெற்ற யுபிஐ மூலமே செயல்படுவதாகவும்.
இந்த யுபிஐ ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற ஒன்று என்பதால், கூகுள் பே மற்றும் அதே போல செயல்படும் அமேசான் பே, போன் பே, BHIM உள்ளிட்ட பணப்பரிவர்த்தன செயலிகள் தனியாக லைசென்ஸ் பெறத் தேவையில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.
கூகுள் பே மூலம் யாருடைய பணமும் சேமிக்கப் படுவதில்லை என்றும், நாட்டில் உள்ள வங்கிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக ஒருவரது அக்கவுண்டில் இருந்து மற்றொருவர் அக்கவுண்டுக்கு பணப்பறிமாற்றம் செய்வது மட்டும்தான் கூகுள் பே செய்கிறது என இந்தியாவுக்கான கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு வரும் ஏப்ரல் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது, கூகுள் இந்திய நிறுவனத்தின் விளக்கத்தை நீதிபதிகள் ஆலோசனை செய்வார்கள். மேலும், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அதன் விளக்கத்தையும் நீதிபதிகள் கலந்தாலோசனை செய்து உரிய தீர்ப்பு வழங்குவர்.
வந்துவிட்டது கூகுள் டியூப்லக்ஸ்: நுண்ணறிவு மென்பொருளால் புதிய புரட்சி