பாலாகோட் விமானப் படை தாக்குதல் பிரதமர் மோடியின் பேச்சு விதிமீறல் தான் - தேர்தல் அதிகாரி அறிக்கையால் பரபரப்பு
தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது போன்றவற்றை குறிப்பிட்டுப் பேசியதில் தேர்தல் விதிமுறையை மீறியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் குறித்து எதுவும் பேசக்கூடாது. வீரர்களின் படங்களையும் அரசியல் கட்சிகள் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் கண்டிப்பு காட்டியுள்ளது. ஆனால் 3 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் தலைமுறை வாக்காளர்கள், பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்தியப் படை தாக்குதல் மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் தங்கள் முதல் வாக்கை பதிவு செய்யுமாறு வீராவேசத்துடன் கூறியிருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், பிரதமர் மோடியின் லத்தூர் பொதுக் கூட்ட பேச்சில் தேர்தல் விதிகளை மீறி பேசியதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாக ஒஸ்மானாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தலைமை தேர்தல் ஆணையம் தான் என்று தெரிவித்துள்ளார். இதனால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாயுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.