காவிரி டெல்டா பகுதியில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? -அனுமதிகோரி வேதாந்தா விண்ணப்பம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
காவிரிப்படுகையில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடல்பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் தலா இரண்டு மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய பெட்ரோலியத்துறை கடந்த ஆண்டு வழங்கியிருந்தது. இந்நிலையில், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்த சூழலில் மத்திய அரசு அமைதி காத்து வந்த நிலையில், Open Acrege Licensing Policy மூலம் மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் துவக்க விண்ணப்பித்துள்ளது வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி.
தமிழகத்தில் இதுவரை காப்பர் உருக்கு ஆலை மட்டுமே வைத்திருந்த வேதாந்தா, தற்போது முதல் முறையாக எண்ணெய் மற்றும் சுரங்க கிணறுகள் அமைக்கும் பணியைத் துவக்க உள்ளது. ஏற்கனவே, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எண்ணெய் கிணறுகள் மற்றும் சுரங்களை அமைத்துள்ள வேதாந்தா தமிழகத்திலும் அமைக்க விண்ணப்பித்துள்ளது.
வேதாந்தா நிறுவனம் விண்ணப்பத்தின் அடிப்படையில், 274 கிணறுகளை ஆழமற்ற கடல் பகுதி, அதாவது காரைக்கால், நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இங்கு எண்ணெய் எரிவாய்வ்வு கிணறுகள் அமைத்திருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனமானது மேலும் 67 கிணறுகளுக்கான விண்ணப்பங்களை தற்போது மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இதில் ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.