தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய அணி
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி 2-1 என்ற விகிதத்தில் தொடரை இழந்தது.
நேற்று முதல் ஒருநாள் போட்டி டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்று போட்டிங்கை தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் கையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் சிக்கி தவித்தனர். தொடக்க வீரர் ஆம்லா 16(17) மற்றும் டீ காக் 34(49) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய டூ பிளஸ்ஸிஸ் மட்டும் நிதானமாக ஆடி 120(112) ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்க அணியால் 269 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 சாஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் ரோஹித் சர்மா, தவான் விக்கெட்டுக்களை இழந்தாலும் கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி அபாரமாக விளையாடி 112 ரன்களும், ரஹானே 79 ரன்களும் எடுத்தனர். கோலி-ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து கோலி 119 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தல டோனி, வழக்கம் போல பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் அடித்த சதத்தின் மூலம் கோலி தனது சதங்களின் எண்ணிக்கையை 33-ஆக உயர்த்தியுள்ளார். மேலும் சேசிங்கில் அவர் அடித்த 20-வது சதம் இதுவாகும். தென் ஆப்பிரிக்கா தன் சொந்த மண்ணில் தொடர்ந்து 17 வெற்றிகள் பெற்று வலுவான அணியாக வலம் வந்தது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
இந்த போட்டிக்கு முன்பு வரை, டர்பன் மைதானத்தில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 6 போட்டிகளில் தோல்வியடைந்தும், ஒரு போட்டி முடிவு இல்லாமலும் போனது. நேற்றய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, டர்பன் மைதானத்தில் இதுவரை இருந்த தென்ஆப்பிரிக்க ஆதிக்க வரலாற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
ICC தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியா முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்றால் 4-2 என்ற விகிதத்தில் ஒருநாள் தொடரை இந்தியா வெல்ல வேண்டும். முதல் போட்டியில் பெற்ற வெற்றி, தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடிக்க மிகவும் உதவியாக இருக்கும். போதாத குறைக்கு தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதும், இந்திய அணியின் வரப்போகிற வெற்றிகளுக்கு பேருதவியாக இருக்குமென்றே சொல்லலாம்.
அடுத்த போட்டி வரும் ஞாயிறு அன்று செஞ்சூரியனில் பகல்-இரவாக நடைபெறும்.