நான் நடிகன்...கண்களாலேயே வாக்கு சேகரிப்பேன்! கமல் ஆருடம்
தான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களால் பேசி வாக்கு சேகரிக்க முடியும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தன்னுடைய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் கமல். வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தனியார் ஆதிக்கம் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அதிமுக திமுகவுக்கு எதிராக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், கடலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து இன்று பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய கமல்ஹாசன், ’ தபால் வாக்குப்பதிவின் போது போலீஸார் தொப்பியைக் கழற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும். காவல்துறையை காவல்துறையாக செயல்பட வைப்பது தமிழக அரசின் கடமை. பல இடங்களில் நுழைய மற்றும் பேச தேர்தல் ஆணையம் எனக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், நான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன்’ என்று சிரித்தபடி பேசினார்.