அமேதியில் ராகுல் காந்தி நெற்றி மீது பட்ட லேசர் ஒளி - ஸ்னைபர் துப்பாக்கி மூலம் குறி வைக்கப்பட்டாரா? காங். சந்தேகம்
அமேதி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் நெற்றியில் பச்சை நிற லேசர் ஒளி பலமுறை பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியை சுட்டுக் கொல்ல ஸ்னைபர் துப்பாக்கி மூலம் வெகு தொலைவில் இருந்து குறி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் , ராகுலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நடு நெற்றியில் 7 முறை பச்சை நிற லேசர் ஒளி பட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த லேசர் ஒளிபட்டது காங்கிரஸ் தரப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, ராகுல் காந்தியின் உயிருக்கு வைக்கப்பட்ட குறி என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜி வாலா ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த லேசர் ஒளியானது ஸ்னனபர் கன் எனப்படும் தொலைதூரத்தில் இருந்து சுடும் வசதி கொண்ட துப்பாக்கியில் இருந்து வெளிவரக் கூடியது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். இதனால் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் உத்தரப் பிரதேச மாநில அரசு வழங்கிய பாதுகாப்பிலும் குளறுபடிகள் உள்ளது. .
ஏற்கனவே பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் திட்டம்ட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் உயிருக்கு பாதுகாப்பு தான் முக்கியம். போதிய பாதுகாப்பு வழங்குவதுடன், லேசர் ஒளி பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கடிதமும், சம்பந்தப்பட்ட வீடியோ பதிவும் உள்துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து என காங்கிரஸ் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள சந்தேகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.