திரைப்படத்துக்கு தடை! மேற்கு வங்க அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம்!!
வங்கமொழியில் தயாரிக்கப்பட்ட அரசியல் நையாண்டி திரைப்படத்திற்கு தடை விதித்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு ஆளும்கட்சியை விமர்சித்தாலே அரசு கடுமையாக நடந்து கொள்ளும் என்பது அறிந்த விஷயம்தான்.
கடந்த பிப்ரவரி மாதம் அம்மாநிலத்தில் ‘போபிஸ்யோட்டர் பூட்’ என்ற வங்கமொழி திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஆளும்கட்சியை கடுமையாக நையாண்டி செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. உடனே, இந்த படத்தை தியேட்டரில் இருந்து தூக்க வேண்டும். தொடர்ந்து வெளியிட்டால் அரசியல் கலவரம் வெடிக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி, அம்மாநில போலீசார் தடை விதித்தனர். கொல்கத்தா காவல் துறை இணை ஆணையர் இது தொடர்பாக படத்தயாரிப்பாளருக்கு கடிதம் எழுதினார். இதனால், தியேட்டர்களில் படத்தை ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டது. இதன்பின், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான இன்டிபிலி இந்தியா, கொல்கத்தா போலீஸ் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருந்ததாவது:
யாரோ கலவரம் செய்வார்கள் என்று கூறி, கருத்துரிமைக்கு தடை விதிக்க முடியாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படத்தைப் பார்க்காதீர்கள். பிடிக்காத புத்தகத்தை படிக்காதீர்கள். பிடிக்காத இசையை கேட்காதீர்கள். ஆனால், அதை தயாரிப்பவர்களை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.
சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். பலருக்கு பிடிக்காது என்பதற்காக மாற்றுக் கருத்து சொல்லவே தடை விதிக்க முடியாது. சென்சார் போர்டு அனுமதித்த பிறகு ஒரு திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ய விடாமல் தடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் கிடையாது. எனவே, மேற்கு வங்க அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கிறோம். படத்தின் தயாரிப்பாளருக்கு அதை இழப்பீடாக தருவதுடன், வழக்கு செலவுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.