சில்மிஷம் செய்த நபருக்கு பளார் அறை விட்ட குஷ்பு - வைர லான வீடியோ
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சில்மிஷம் செய்த நபரை ஆத்திரத்தில் பளார் பளார் என நடிகை குஷ்பு அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாசி விமர்சனங்கள் எழ அதற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு.
காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திருச்சி தொகுதியை குறிவைத்தார். ஆனால் திருநாவுக்கரசர் முட்டி மோதி தொகுதியை வசப்படுத்த, சோகத்தில் மூழ்கிய குஷ்பு, கட்சிக்காக பிரசாரத்திற்கு செல்லவும் முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர் லேட்டாக தேனி தொகுதியில் மட்டும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விட்டு கர்நாடகா மாநிலம் பக்கம் பிரச்சாரம் செய்ய சென்று விட்டார்.
இன்று மத்திய பெங்களூரு பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற குஷ்புவைக் காண ஏராளமான கூட்டம் கூடி விட்டது.கூட்டத்தில் சிக்கிக் கொண்ட குஷ்புவிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷம் செய்ய கடும் ஆத்திரமடைந்தார் குஷ்பு. அந்த இளைஞரை ஆத்திரம் தீரும் வரை பளார் பளார் என அறை விட்டார் குஷ்பு. பின்னர் அந்த இளைஞரை போலீசார் பிடித்துச் சென்றனர்.
குஷ்பு பளார் விடும் காட்சிகளுடனான வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் பரவி, குஷ்புவுக்கு ஆதரவாகவும், எதிர்மறையாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் எதிரான கருத்து கூறுபவர்களுக்கு உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்காகப் பணிபுரிபவர்கள் மற்றும் தலைவர்களின் நிஜமுகம் இதுதான் என்று பதிவிட்ட ஒருவருக்கு
பதிலடியாக, "நிஜமா? அப்படியென்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள், சில மோசமான ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அமைதியாக பொறுத்துப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?ஒரு பெண் உங்களைப் போன்ற ஒருவரை வளர்த்தெடுத்திருப்பது வெட்கக் கேடு. என் அம்மா எனக்கு தைரியமாக இருக்கக் கற்றுத் தந்திருக்கிறார். நான் அதைப் பின்பற்றுகிறேன். அகில இந்திய காங்கிரஸ் அப்படியான பெண்களை நினைத்துப் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.
மேலும், இந்த வீடியோ தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு எதிர் கருத்துகள் கூறும் அனைவருக்கும் சுடச்சுட பதிலடி கொடுத்த வருகிறார் குஷ்பு.