செலவு பண்ணிட்டேன், இனி காசு இல்லை
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை வெற்றி பெற்று தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அவப்பெயரும், மத்திய மாநில அரசுகள் மீதான வெறுப்பும் சேர்த்து அவரை திணறடிக்கிறது.
இதனால் பல கிராமங்களில் ஓட்டு கேட்டு செல்லும் போது அவரை வழிமறித்து மக்கள் உள்ளே நுழைய விடாமல் விரட்டி அடிக்கின்றனர். போதாக்குறைக்கு செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி சேர்ந்துகொண்டு நோகடித்து வருகின்றனர். இதனால் மனுஷன் ஏகத்துக்கும் வருத்தத்தில் இருக்கிறார்.
இதனால் கடுப்பான அவர் சில தினங்களுக்கு முன் மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் "ஓட்டு போட்டா போடுங்க, இல்லைனா வேண்டாம். அதுக்காக உங்க காலில் விழ முடியாது" என கோபத்தை கக்கினார். இதுசர்ச்சையை ஏற்படுத்த இதேபோன்று தற்போது மீண்டும் மக்களிடம் கோபமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தலாடம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தண்ணீர்ப் பிரச்னை, சுடுகாடு என பிரச்சினைகளை அடுக்கி கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். இதனால் டென்ஷனான தம்பிதுரை, "எம்.பி பணம் அனைத்தையும் தொகுதிக்காகச் செலவு பண்ணிட்டேன். மத்த விசயம் செய்ய, நான் என்ன என்னோட சொந்த பாக்கெட்டுல இருந்தா பணத்தை எடுக்க முடியும்? அப்படி, பண்ணவும் வழியில்லை. ஏன்னா, நானும் உங்களமாதிரி சாதாரண கஷ்டப்படுற நபர்தான். என்கிட்ட அவ்வளவெல்லாம் காசு கிடையாது" எனக் கூறினார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.