திருமணம் ஆன கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்ட மணமகன்!
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமகன் ஒருவர் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடுமுழுவதும் உள்ள 20 மாநிலங்களில் நடைபெற்றது. ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் சட்டமன்ற தேர்தலும் இன்றும் நடைபெற்றது.
மின்னணு இயந்திரம் பல இடங்களில் செயல்படாமல் போனது குறித்து சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தார். நாகினி நடனம் ஆடிக்கொண்டு வேட்பாளர் ஒருவர் வாக்களித்தது. ஜன சேனா வேட்பாளர் இவிஎம் மெஷினை கீழே போட்டுடைத்தது என பல சம்பவங்கள் இன்றைய தேர்தல் களத்தில் நடந்தது.
இந்த தேர்தல் கூத்துக்கு நடுவே உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமகன் ஒருவர் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.
திருமணத்தில் தனக்கு அணிவித்த காசு மாலையை கூட கழட்ட நேரமில்லாமல், அந்த மணமகன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார்.
பிஜ்னோர் மக்களவைத் தொகுதியின் தற்போதைய எம்.பியாக பாஜகவை சேர்ந்த ராஜ பர்தேந்திர சிங் உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸை சேர்ந்த நசிமுதின் சித்திக் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 6 கட்ட தேர்தல்களில் எத்தனை களேபரங்கள் நடைபெற விருக்கிறது என்பது போக போகத்தான் தெரியும்.
மீண்டும் முதல்வர் ஆவாரா? ஆந்திராவில் குடும்பத்துடன் வாக்களித்த சந்திரபாபு நாயுடு!