கடைசி ஓவரில் அதிரடி.... ஸ்ரேயாஸ் - ஆர்ச்சர் ஜோடியால் கௌரவ இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்
சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜன் உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மிட்சேல் சாண்டரும், ஸ்காட் குகேஜிலினுக்குப் பதிலாக ஷர்துல் தாகூரும் இடம்பிடித்தனர். இதேபோல் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், உனட்கட் ஆகியோருடன் 17 வயதே ஆகும் ரியான் பராக் என்னும் இளைஞரும் புதுமுகமாகக் களமிறங்கினார்.
அதன்படி ரஹானேவும், ஜோஸ் பட்லரும் ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் தந்தனர். இந்த ஜோடி சிறிது நேரம் மட்டுமே நிலைத்தது. மூன்றாவது ஓவரிலேயே தீபக் சஹார் பந்துவீச்சில் ரஹானே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே பட்லரும் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க அதன்பின் வந்தவர்களும் சொதப்பினர். சஞ்சு சாம்சன், ஸ்மித், திரிபாதி ஆகியோர் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆக ராஜஸ்தான் அணி தடுமாறியது. இருப்பினும் அடுத்து வந்த ஸ்டோக்ஸ் சிறிது அதிரடியாக ஆடி 28 ரன்கள் சேர்த்தார். பின்னர் கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் கோபால், ஆர்ச்சர் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் மட்டும் இந்த ஜோடி 18 ரன்கள் சேர்த்தது. அவர்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா, தாகூர், சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.