`இஸ்லாமிய மக்கள் இருப்பதால் மட்டும் பாகிஸ்தான் ஆகிவிடுமா? - அமித் ஷாவின் வயநாடு குறித்த பேச்சு பினராயி கண்டனம்
வயநாடு குறித்த அமித் ஷாவின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
உ.பி.யின் அமேதி தொகுதியில் தொடர்ந்து 3 முறை வென்ற ராகுல் காந்தி இம்முறையும் அங்கு போட்டியிடுகிறார். தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியை தேர்வு செய்தார். இதனால் வயநாடு தொகுதி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார் ராகுல். இந்நிலையில் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதை விமர்சித்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வயநாட்டில் இருக்கும் இஸ்லாமிய மக்களைப் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனை கண்டித்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அமித் ஷாவை கடுமையாக குற்றம் சாட்டினார்.
வயநாட்டில் இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், ``அமித் ஷா, வயநாட்டை அவமதித்துவிட்டார். பாகிஸ்தானில் நடப்பதுபோல இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர் கூறவில்லை. வயநாடு பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா? பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்ட வரலாற்றில் வயநாட்டின் பங்கு என்ன என்பது அமித் ஷாவுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்திருந்தால், அவர் வயநாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டிருக்க மாட்டார். இஸ்லாமிய மக்கள் இருப்பதால் மட்டும் வயநாடு பாகிஸ்தான் ஆகிவிடுமா. பழசிராஜாவுடன் கைகோத்து வயநாட்டு பழங்குடி மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினார்கள். இது அவருக்கு தெரியாது. ஏனென்றால், எனக்குத் தெரிந்து சுதந்திரப் போராட்டம் குறித்து பா.ஜ.க-வினருக்கு எதுவும் தெரியாமல் இருக்கும். அதனால்தான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். இது மாதிரியான பேச்சால் பாஜக தனக்குத்ததானே குழியைத் தோண்டிக்கொள்கிறது" என விமர்சித்தார்.