ஸ்மார்ட் போன் பற்றிய உண்மைகளை உரக்கப் பேசிய இரும்புதிரை... பார்ட் 2 எடுக்க விஷால் பச்சைக் கொடி

விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.  டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இரும்புத்திரை பேசியிருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அறிவியல் சார்ந்த படங்கள் வரும். ஏனென்றால் அதுபோன்ற படங்களுக்கு நிறைய ஆய்வு செய்ய வேண்டி இருக்கும்.

இயக்குநர் மித்ரன் தன் முதல் படத்திலேயே அறிவியல் சார்ந்த ஒரு கதையை தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்திருப்பார். இரும்புத்திரை கண்டிப்பாக இந்த ஜெனேரேஷன் பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டப்பட்டது. குறிப்பாக ஸ்மார்ட் போன் உலகத்தில் வாழும் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். நம் இரு கண்கள் தான் மொபைலை பார்க்கின்றது, ஆனால் நமக்கே தெரியாமல் நம்மை ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றது என்னும் உண்மையை வெளிகாட்டி ஒருவித அச்சத்தையும் விழிப்புணர்வையும் படம் ஏற்படுத்திவிட்டது.

கடந்த 2018ல் விஷால் நடித்து, தயாரித்த இந்த படத்தில் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டனர். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜூனும், ஜோடியாக சமந்தாவும் நடித்திருந்தனர். யுவன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். தவிர, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் செய்திருந்தார். நீண்ட காலங்களுக்குப் பிறகு, விஷாலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிப் படமாக இரும்புத்திரை அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரும்புத் திரை 2 படத்தை தயாரித்து, நடிக்க விஷால் ஆர்வம் காட்டிவருகிறார்.

இம்முறை இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன், இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. தற்பொழுது சிவகார்த்திகேயன் படத்தில் பிஸியாக இருக்கிறார் மித்ரன். ஆக, இயக்குநர் எழிலிடம் உதவியாளராக இருந்த ஆனந்த் என்பவர், இரும்புத் திரை 2 படத்தை இயக்கவிருக்கிறார். அவர் கூறிய கதை விஷாலுக்கு பிடித்துப் போக, முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

விஷால் நடிப்பில் அயோக்யா திரைப்படம் மே 10ல் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>