ஸ்மிருதி இரானி பட்டதாரியா? படித்தது பி.ஏ.வா, பி.காம்.மா? வேட்புமனுவில் சர்ச்சை!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பு படித்திருக்கிறாரா? அவர் பி.ஏ. பட்டதாரியா, பி.காம் பட்டதாரியா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டுத்தான் தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் அவரையே பா.ஜ.க. நிறுத்தியிருக்கிறது.

அவர் நேற்று அமேதியில் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், தனது அதிகபட்ச கல்வித் தகுதியாக டெல்லி பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டில் பி.காம் பார்ட்-1(மூன்றாண்டு படிப்பு, முடிக்கவில்லை) படித்ததாக கூறியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தனது அபிடவிட்டில் இதே போல், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டில் பி.காம். பார்ட்-1 படித்ததாக கூறியிருந்தார். ஆனால், அப்போது அந்தப் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று குறிப்பிடாமல், பட்டம் பெற்றது போல் காட்டியிருந்தார்.

ஆனால், அதற்கு முன்பு அவர் 2004ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்ட போது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில், தான் பி.ஏ. பட்டதாரி என்று கூறியிருந்தார். மேலும், 1996ம் ஆண்டில் அஞ்சல் வழிக்கல்வியில் பி.ஏ. படித்ததாக கூறியிருந்தார்.

இதனால், அவர் பி.ஏ.வா, பி.காம் படித்தவரா என்ற சர்ச்சை, அவர் 2014ல் அமைச்சரான போதே எழுந்தது. அதுவும் அவர் உயர்கல்வித்துறையைக் கொண்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்றதால் காங்கிரஸ் கேலி பேசியது. டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், ‘‘ஸ்மிருதி இரானி பட்டதாரியே அல்ல’’ என்று அப்போது சர்ச்சையைக் கிளப்பினார்.

இதற்கிடையே, அவரது படிப்பு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஸ்மிருதி இரானி பள்ளிப்படிப்பை முடித்தாரா என்று கூட சந்தேகம் கிளப்பப்பட்டு, தகவல் கேட்கப்பட்டது. அப்போது அவரது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண்களை தர மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மறுத்தது. இதை எதிர்த்து தேசிய தகவல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன்பின், பள்ளியிறுதி தேர்வு முடிவுகள் பகிரங்கமாக வெளியிடப்படுபவை என்பதால், அவற்றை தர மறுக்கக் கூடாது என்று தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில், கடந்த முறை பி.காம் முடித்தது போல் வேட்புமனுவி்ல் குறிப்பிட்டிருந்த ஸ்மிருதி இரானி இந்த முறை பி.காம். பார்ட் -1 (மூன்றாண்டு படிப்பு, முடிக்கவில்லை) என்று குறிப்பிட்டிருப்பதும் சர்ச்சையை கிளறி விட்டிருக்கிறது.

More News >>