ஓடும் ரயிலில் தொல்லை: தனியொருத்தியாக எதிர்த்த நடிகை!

இன்று அதிகாலை ஓடும் ரயிலில் நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர் ஒருவரை தனியாக அந்த நடிகை எதிர்த்துப் போராடியுள்ளார். உதவிக்கு அழைத்தும் அருகிலிருந்த யாரும் உதவ முன்வராதது வருத்தமளிப்பதாக அந்த நடிகை கூறியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிறந்த துணை நடிகையாக வளர்ந்து கதாநாயகியாக உயர்ந்தவர் சனுஷா சந்தோஷ். தமிழில் ரேணிகுண்டா, எத்தன், அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நேற்று இரவு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ஏசி பெட்டியில் மேல் இருக்கையில் தூங்கிக்கொண்டு வந்தவருக்கு நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தூக்கத்திலிருந்து விழித்த சனுஷா கீழ் படுக்கை இருக்கைகளில் இருப்பவர்களிடம் உதவி கேட்டும் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

மர்ம நபருடன் தனி ஒருவளாக போராடி உள்ளார் சனுஷா. நீண்ட நேரத்துக்குப் பின்னர் பக்கத்து பெட்டியிலிருந்து வந்த இருவர் சனுஷாவுக்கு ஏதோ பிரச்னை என்பதை அறிந்து டிடிஆர்-ஐ அழைத்து வந்துள்ளனர். டிடிஆர் வரும் வரையில் அந்த மர்ம நபரை விடாது அவருடன் சனுஷா போராடி வந்தார். அதன் பின்னர் அடுத்த ரயில் நிலையத்தில் அந்த நபர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து சனுஷா அளித்துள்ள பேட்டியில், “நள்ளிரவில் தனியே பயணிக்கும் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்றபோது பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்களிடம் உதவி கேட்டும் யாரும் உதவமுன்வரவில்லை. திருச்சூர் அருகே உள்ள ஒரு நிலையத்தில் நானே இறங்கி ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்த பின்னர் அதே ரயிலில் பயணம் செய்து திருவனந்தபுரம் வந்தேன்” எனக் கூறினார்.

More News >>