வேக பந்துவீச்சில் அடிபட்டு உயிர்விட்ட இந்திய கிரிக்கெட் வீரரின் கதை! - எதிர்பார்ப்பை தூண்டும் ஜெர்சி டிரெய்லர்
தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் அறியப்பட்ட தெலுங்கு நடிகர் நானி நடித்திருக்கும் ஜெர்சி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இயக்குநர் கெளதம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஜெர்சி. இந்தப் படத்தில் கிரிக்கெட்டராக நானி நடித்துள்ளர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
முதலில் இந்தப் படத்தின் வெளியீடு ஏப்ரல் 5 என சொல்லப்பட்டது. பிறகு ஏப்ரல் 25க்கு தள்ளிப்போனது. ஏப்ரல் 25ல் மகேஷ்பாபுவின் மஹரிஷி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், வசூல் பாதிக்கும் என படத்தின் ரிலீஸ் தற்பொழுது ஏப்ரல் 19 என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
`க்ருஷ்ணார்ஜுன யுத்தம்’, `தேவ்தாஸ்’ என கடந்த வருடம் ரிலீஸான இரண்டு படமும் நானிக்கு சொல்லும் படியான வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இந்த முறை ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நானி. `மல்லி ராவா’ படம் மூலம் அறிமுகமான கௌதம் தின்னானுரி இந்தப் படத்தின் முழு வேலைகளையும் முடித்துவிட்டார். ரிலீஸூக்கான வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. சத்யராஜும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் பெரிய கிரிக்கெட் வீரராக இருக்கும் நானி, திருமணத்திற்குப் பிறகு பணப்பிரச்னையால் வேலைக்கு செல்லும் சூழல். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வரும் நானிக்கு, கிரிக்கெட் கைகொடுத்ததா என்பதே ஒன்லைன்.
இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லம்பா அவரது வாழ்க்கையை மையமாக கொண்டதுதான் இந்த திரைப்படம். ராமன் லம்பா இந்திய அணிக்காக பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர். ஒருமுறை தனியார் கிரிக்கெட் கிளப்பிற்காக கிரிக்கெட் விளையாடும் பொழுது எதிர் அணியினர் வீசிய அதிவேக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் கோமா நிலைக்கு சென்றார்.
இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் எந்தவித சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரிக்கெட் வீரர் ராமன் லம்பாவின் மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்பொழுது அவரது வாழ்க்கையை மையப்படுத்திதான் ஜெர்சி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. நானி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல கிரிக்கெட் ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.