பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடருவார்! அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

தமிழகத்தில், சிலை கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளை அதிரடியாக முன்னெடுத்தவர் பொன்.மாணிக்கவேல். இவர், நடத்திய விசாரணையில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் ஒய்வு பெற்றதையடுத்து, அவரை மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் நியமித்தது.

இந்நிலையில்,பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் நியமனம் சரிதான் என்றும் அரசு அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இந்த, வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது சரிதான். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம். ஆனால், கைது நடவடிக்கைகளை அவர் செய்யக் கூடாது’ என்று சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

More News >>