ஐபிஎல் பணத்துக்காக வீரர்களை ஏலத்தில் எடுக்கிறது - கங்குலி பகிரங்க குற்றச்சாட்டு
ஐ.பி.எல். போட்டிகளில் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு முன்பாக 8 அணிகளும் 18 வீரர்களை ஏற்கெனவே தக்க வைத்துக் கொண்டன.
இந்த ஏலத்தில் ரூ.431 கோடிக்கு 169 வீரர்கள் ஏலம் போனார்கள். இதில் 56 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக இங்கிலாந்து நாட்டைச் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர்கள் ஜெயதேவ் உனத்கட் ரூ.11.5 கோடிக்கும், மனீஷ் பாண்டே, ரஹானே தலா ரூ.11 கோடிக்கும் ஏலம் போனார்கள்.
ஐ.பி.எல் போட்டிக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வை நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கடுமையாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலியும் வீரர்களின் ஏலத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஐ.பி.எல். ஏலம் குறித்து கூறியுள்ள கங்குலி, “ஐ.பி.எல். போட்டிகளில் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த ஏல முறையை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட வேண்டாம். ஐ.பி.எல். போட்டி என்பது தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாக கொண்டது.
சர்வதேச போட்டிகளில் 54 சதங்கள் குவித்துள்ள ஹசிம் அம்லா ஏலத்தில் போகவில்லை. அதே நேரம், ரஞ்சிப் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இஷான் கிஷன் 6.2 கோடிக்கு ஏலம் போயுள்ளார். ஆகையால், ஐ.பி.எல். போட்டி எந்த ஒரு வீரரின் மதிப்பையும் தீர்மானிக்கும் அளவு கோல் அல்ல” என கங்குலி கூறியுள்ளார்.