ராணுவத்தை அரசியலாக்குவதை தடுத்து நிறுத்துங்க...! ஜனாதிபதிக்கு முன்னாள் தளபதிகள் பகிரங்க கடிதம்

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக இந்திய ராணுவத்தையும், வீரர்களின் தியாகத்தையும் பயன்படுத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள் 156 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவ வீரர்கள் செய்யும் சாகசங்களை, சாதனைகளை, வீர தீரச் செயல்களை தாங்கள் செய்தது போல் தம்பட்டம் அடித்து பிரச்சாரம் செய்கிறது பாஜக அரசு. பாலா கோட் தாக்குதல், புல்வாமா தீவிரவாத தாக்குதல் போன்றவற்றை பிரதமர் மோடி பகிரங்கமாகவே உச்சரிப்பது எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி, முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளையும் கோபமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிகோஸ், ராய் சவுத்ரி, தீபக் கபூர், விமானப் படை தளபதி சூரி உள்ளிட்ட ஓய்வு பெற்ற 156 உயர் அதிகாரிகள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சமீப காலமாக ராணுவத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்தும், அதனை மீறிவது சர்வ சாதாரணமாகி விட்டது. தேர்தல் ஆதாயத்திற்காக ராணுவ வீரர்களின் சீருடையை கட்சியினர் அணிவது, போஸ்டர் அடிப்பது போன்ற அத்துமீறல்கள் தொடர்வது வேதனையளிக்கிறது. இது போன்ற செயல்கள், உயிரைக் கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நம் வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும். இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் படை என உ.பி.மாநில முதல்வரே உச்சரிப்பதும், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய இந்திய விமானி அபிநந்தனை சொந்தம் கொண்டாடுவதும், எல்லை தாண்டி நடத்திய விமான தாக்குதலைக் கூறி, தாங்கள் நடத்தியது போல் பெருமை கொள்வதும் போன்ற செயல்கள் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுவது வேதனை தருகிறது.

இதனால் அரசியல், மதம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட ராணுவத்தை அரசியலாக்குவதை உடனே தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கு இதுதான் உகந்த தருணம் என்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கடிதத்தில் கூறியுள்ளனர். ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை பகிரங்கமாகவும் வெளியிட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>