பண்டிகைக்காக தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்
பண்டிகையை காரணம் காட்டி தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வரும் 18ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படும் என்பதால் தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் பண்டிகையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது, இதனையடுத்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிறிஸ்துவ அமைப்பு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட போதே, சித்திரை திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகள் அந்த சமயத்தில் நடக்கும் என்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் ஒரு சாரர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கு மறுத்து விட்டது. அதேசமயம் மதுரையில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.