சவுக்கிதாரை எதிர்க்கும் சவுக்கிதார் ! வாரணாசியில் முன்னாள் படை வீரர் !!
பிரதமர் நரேந்திர மோடி இந்த முறையும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு அவர் திடீரென தன்னை சவுக்கிதார் என்று அடைமொழியிட்டு கூறினார். நாட்டின் காவலாளி என்று தன்னை அறிவித்து கொண்ட அவர், நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர்கள் எல்லோரும் சவுக்கிதார் என்று பெயருக்கு முன்னாள் போட்டு கொள்ளவும் கூறினார்.
தற்போது அவரை எதிர்த்து உண்மையிலேயே ஒரு சவுக்கிதார், வாரணாசியில் களம் காண்கிறார். வாரணாசியில் போட்டியிடும் தேஜ்பகதூர் யாதவ் ஒரு முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இப்போது எல்லோரும் ராணுவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் 21 ஆண்டுகள் படை வீரராக இருந்துள்ளேன். எனக்கு தெரிந்து காங்கிரசோ, பா.ஜ.க.வோ ஆட்சியில் இருக்கும் போது படைவீரர்களின் நலனுக்காக பெரிதாக எதுவும் செய்து விடவில்லை.
2013ம் ஆண்டில் லேன்ஸ் நாயக் ஹேம்ராஜ், பாகிஸ்தான் படையினரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட போது, காங்கிரஸ் அரசாங்கத்தை நரேந்திர மோடி கடுமையாக சாடினார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்பு ராணுவ வீரர்கள் இறப்பது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஓராண்டில் 997 வீரர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் 5 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் எனக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள்’’ என்றார்.