ஓட்டு போடாத முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க மாட்டேன் புயலை கிளப்பும் மேனகா பேச்சு!!

இந்திராகாந்தியின் மருமகளான மேனகா காந்தி நீண்ட காலமாக பா.ஜ.க.வில் இருக்கிறார். தற்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். கடந்த முறை அவர் உத்தரபிரதேசத்தில் பிலிபித் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை அந்த தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி, பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால், மேனகா காந்தி இந்த முறை சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் துராப்கானி கிராமத்தில் இன்று(ஏப்.12) அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் வென்றால், அவர்களுக்கு நான் எப்படி உதவ முடியும்? என்னிடம் நீங்கள் வேலை கேட்டு வந்தால் எப்படி உங்களுக்கு வேலை தருவேன். இதுவும் கொடுக்கல், வாங்கல் போன்றதுதான். முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால் மட்டுமே என்னிடம் வேலை கேட்டு வருவதில் நியாயம் இருக்கிறது. அப்போதுதான் நானும் அவர்களுக்கு வேலை கொடுப்பேன்’’ என்று கூறினார்.

முஸ்லிம்கள் வாக்களித்தால் மட்டுமே வேலை கொடுப்பேன் என்று மேனகா காந்தி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேனகா காந்தியின் பேச்சு தேர்தல் களத்தில் ஒரு புயலை கிளப்பியுள்ளது.

More News >>