நாகூரா? நாக்பூரா? ராகுல் காந்தி பிரசாரத்தில் மீண்டும் நடந்த மொழிப்பெயர்ப்பு தவறு!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தங்களது பிரசாரங்களை அடிக்கடி நடத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் மொழிப் பெயர்க்கும் அக்கட்சியை சேர்ந்த தமிழக தலைவர்கள், அவர்களாகவே மானே தேனே பொன்மானே என வாய்க்கு வந்தபடி ஃபில் அப் செய்து டிரான்ஸ்லேட் செய்கின்றனர்.
முன்பை போல அல்லாமல், அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் சமூக வலைதள போராளிகளும், நேரலையில் நிகழ்ச்சிகளை பார்ப்பதால், அவர்கள் செய்யும் மொழிப்பெயர்ப்பு குளறுபடிகள் அப்பட்டமாக வெளியே தெரிந்து விடுகிறது.
ராகுல் காந்தி முன்னதாக தமிழகத்தில் பிரசாரம் செய்த போது, தங்கபாலு அவர் பேசியதை தவறாக டிரான்ஸ்லேட் செய்தார் என மீம்ஸ்கள் எல்லாம் பறந்தன.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று ராகுல் பிரசாரம் செய்யும் போது, அவருக்கு தங்கபாலுவுக்கு பதிலாக முன்னாள் பேராசிரியர் பழனிதுரை என்பவர் மொழிப்பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், ராகுல் காந்தி பேசியதை அவரும் தவறாக மொழி மாற்றம் செய்ததால், சேலத்தில் நடைபெற்று வரும் பிரசாரக்கூட்டத்தில் பழனிதுரை ஓரங்கப்பட்டுவிட்டு, டி.கே.எஸ் இளங்கோவன் டிரான்ஸ்லேட் செய்தார்.
ராகுல் காந்தி ஓரிடத்தில், தமிழகத்தை நாக்பூரில் இருந்து பாஜக ஆட்சி செய்ய நினைக்கிறது என்றார். அதற்கு நாகூரில் இருந்து பாஜக ஆட்சி செய்ய உள்ளது என தவறாக மொழி மாற்றம் செய்தார்.
உடனடியாக ராகுல் காந்தியே அவரை முறைத்துப் பார்த்து விட்டு, மீண்டும் நாக்பூர் எனக் கூறினார்.
இதைவிட, மூன்றரை லட்சம் கோடி என்று ராகுல் காந்தி சொன்னதை மாற்றி 50 ஆயிரம் கோடி என டிகேஎஸ் பேசியதெல்லாம் அடுத்த மீம் மேட்டர்களாக மாறியுள்ளன.