மோடியின் ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின் தாக்கு....
மோடியின் ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஓரே தி.மு.க. தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்தனர். சேலம் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதம சிகாமணி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி மற்றும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்தனர்.
அந்த மேடையில் தி.மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்று நான் அறிவித்த அறிவிப்புக்கு தற்போது ஆதரவு பெருகி உள்ளது. நாடும் நமதே நாற்பதும் நமதே என ராகுல் காந்திக்கு உறுதி அளிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை திராவிட சிந்தனையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அண்ணாவும்,கலைஞரும் இப்போது இருந்து இருந்தால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள். பா.ஜ. தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு பற்றி எதுவும் கூறவில்லை. கற்பனையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ள பா.ஜ.. பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். மோடியின் ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.