அதிமுகவுக்கு டெபாசிட் போகணும்..அதற்காக நாம் பாடுபடனும் டங் ஸ்லிப்பான ராமதாஸ்!
அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகையில் மீண்டும் 'டங் ஸ்லிப்'பில் மாட்டிக் கொண்டார் ராமதாஸ்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டதால் கொளுத்தும் வெயிலில் பிரசார களம் கலகலப்பாக நகர்கிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தன்னுடைய கட்சி வேட்பாளர்கள் ஆகியோருக்கு செட்யூல் போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர் கட்சித் தலைவர்கள். அயராது பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசும் தலைவர்கள் சில நேரங்களில் 'டங் ஸ்லிப்’பாகி ஏடாகூடமாக சிக்கிக் கொள்வது வழக்கம்.
அந்த வரிசையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் மீண்டும் சிக்கியுள்ளார். அண்மையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய ராமதாஸ், ‘மறந்தும் கூட அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து விடாதீர்கள்’ என்று பேசி அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது, மீண்டும் அதிமுகவினரை அதிர வைத்து விட்டார்.
திருப்போரூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பில் ராமதாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது, பேசிய அவர், ‘இந்த தொகுதியில் மீனவ சமுதாய மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். மீனவ சமுதாய மக்கள் என்றும் அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஆகையால், இந்த தேர்தலில் அயராது பாடுபட்டு அதிமுகவுக்கு ‘டெபாசிட்’ இழக்கச் செய்ய வேண்டும்’ எனப் பேசினார். இதை எதிர்பார்க்காத அதிமுக தொகுதி நிர்வாகிகள், திமுக-வுக்கு பதில் அதிமுகனு சொல்லிவிட்டாரே என அல்லோலப்பட்டனர்.