தேர்தலில் டெபாசிட் காலி: ரூ.14.5 கோடி அள்ளிய தேர்தல் ஆணையம்
2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த வேட்பாளர்களால் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.14.5 கோடி கிடைத்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது செக்யூரிட்டி டெபாசிட்டாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். தேர்தலில் தகுதியான மற்றும் உண்மையான வேட்பாளர்கள் போட்டியிடுவதை உறுதி செய்யவும், விளையாட்டு தனமாக மற்றும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கில் இந்த டெபாசிட் தொகையை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.25 ஆயிரமும், சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல் மற்றும் மற்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும் செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்த வேண்டும். அதேசமயம் பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றால் டெபாசிட் தொகையில் 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு அல்லது 16.67 சதவீதத்துக்கு குறைவாக பெற்றால் அந்த வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்தவராக கருதப்படுவார். அதனால் டெபாசிட் செய்த பணத்தை அவரால் திரும்ப முடியாது.
2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களிடம் வாயிலாக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.14.5 கோடி கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 84.9 சதவீதம் பேர் தங்களது டெபாசிட்டை இழந்துள்ளனர். கடந்த தேர்தலில் மட்டும் 3,218 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
கட்சிகளை பொறுத்தவரை, பகுஜன் ஜமாஜ் கட்சி வேட்பாளர்கள்தான் அதிக பேர் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளனர். அவர்களிடமிருந்து தேர்தல் ஆணையம் ரூ.81.3 லட்சம் வசூல் செய்தது. அடுத்து காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள்து டெபாசிட்டை (ரூ.39.3 லட்சம்) பறிகொடுத்தனர். ஏ.ஐ.டி.சி. (ரூ.20 லட்சம்), பா.ஜ.க. (ரூ.11.1 லட்சம்) ஆகிய கட்சி வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.