ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர், ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது, இவர் மேட்ச்ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்தை கைதுசெய்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஸ்ரீசாந்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம்இல்லை' என அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால், பிசிசிஐ ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்காததை அடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின்விசாரணை முடிவில், ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயினும், ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்காலத் தடை நீடிக்கிறது. இதையடுத்து உச்ச நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஸ்ரீசாந்த்.

இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.

More News >>