எனக்கு ஓட்டுப்போடலைனா.. உங்களுக்கு சாபம் விட்டுருவேன் மக்களை மிரட்டி ஓட்டுக் கேட்கும் பாஜகவின் சாக்ஷி மகாராஜ்
உ.பி., மாநிலம் உன்னாவோ மக்களவைத் தொகுதி வேட்பாளர், தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு பாவம் வந்து சேரும் என பயமுறுத்தி உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நல்லாட்சி கொடுப்போம்.. தரையில தண்ணி கிடைக்கும் தலைக்கு மேல தங்கம் கிடைக்கும் என பொதுவாக அரசியல்வாதிகள் தங்கள் வாய்க்கு வந்தபடி வாக்கு கொடுப்பர்.
ஜெயித்த பின்னர், கூவத்தூர் போன்ற ரெசார்ட்டுக்கு சென்று ஓய்வெடுத்துவிட்டு தொகுதி பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆனால், உத்தரபிரதேசத்தின் உன்னாவோ தொகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் மற்றும் சிட்டிங் எம்பியான சாக்ஷி மகாராஜ், ”நான் ஒரு சாது.. சாது கேட்டு எதையும் தர மறுத்தால்.. அவர்களுக்கு அதற்கு உண்டான பாவம் வரும்.. என நான் சொல்லவில்லை சாஸ்திரங்கள் கூறுகின்றன. நான் உங்களுடைய சொத்துக்களை கேட்கவில்லை, உங்களுடைய ஓட்டுக்களைத் தான் கேட்கிறேன்” என பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
பாஜக வேட்பாளர் இப்படி பொதுமக்களை வாக்கு கேட்டு மிரட்டும் தொனியில் பேசிய நிகழ்வு சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இளைஞர்கள் பலர், உங்களுடைய சாபம் எங்களை ஒன்றும் செய்யாது என்றும். அவ்வளவு பாவமா நீங்கள் செய்துள்ளீர்கள் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.