அயோத்தியில் பூஜை: ஒன்னு கேட்டாலும் நறுக்குனு கேட்ட உச்ச நீதிமன்றம்
நாடு அமைதியாக இருக்கவே விட மாட்டீர்களா? என அயோத்தியில் பூஜை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையாக கூறியது.
அயோத்தி விவகாரம் நீதிமன்றத்தில் பல பத்தாண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட மற்றும் ராமர் கோயில் இருந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அதனை சுற்றியுள்ள 67.7 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அந்த 67.7 ஏக்கர் நிலத்தை மட்டும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திரும்ப கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக தீர்வு காண்பதற்காக 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த சூழ்நிலையில், இந்த நிலத்தில் உள்ள 9 கோயில்களில் பூஜை செய்ய அனுமதிக்கும்படி, அமர்நாத் மிஸ்ரா என்பவர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது.
லக்னோ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அமர்நாத் மிஸ்ரா. அந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள், இந்த நாட்டை அமைதியாக இருக்கவே விட மாட்டீர்களா, ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பீர்களா? என கடுமையாக கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.