வேணுமா..வேண்டாமா முடிவெடுக்க வேண்டிய நாள் இதுவே சொல்கிறார் ப.சிதம்பரம்

'நீட்' தேர்வில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து சரியான முடிவு எடுக்க வேண்டிய நான் ஏப்ரல் 18  என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் உச்ச கட்ட பரபரப்பு எட்டியுள்ளது. நீட் தேர்வை மையப்படுத்தி அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு இடம்பிடித்துவிட்டது. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ குறித்து எந்த தகவலும் இல்லை. பாஜக பிரசாரத்திலும் ‘நீட்’ குறித்துப் பேசுவதில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீட் தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘’நீட் தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது. மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் 'நீட' தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18’’. என பதிவிட்டுள்ளார் சிதம்பரம்.

இதையடுத்து, நீட் தேர்வு கிடையாது, +2 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என காங்கிரஸ் உறுதி தருகிறதா? போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More News >>