கமல் ரசிகன் நான்... நீட் காரணமாக ஓட்டு திமுக கூட்டணிக்கே...! அரியலூர் அனிதா சகோதரர் பளிச்

தன்னை நீண்ட கால கமல் ரசிகன் என்று பெருமையாக கூறியுள்ள நீட் தேர்வு காரணமாக உயிரை மாய்த்த அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர், இந்த முறை திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடப் போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அனிதாவின் நினைவாக அறக்கட்டளை நடத்தி வரும் அவருடைய சகோதரர் மணிரத்னம் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்...நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன்,மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்.. ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்...

அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்...

அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்..பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது,என்பதில்......

அனிதா இறந்த போது திருமாவளவன், இதை சும்மா விடக்கூடாது என்று கூறிய அதே திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்..

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி,சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி,தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே..

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தலைவர் திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே...

என்றும் #கமல்_ரசிகன் என்று அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

More News >>